Wednesday, 17 April 2013

தவளைக்கல் சிறுமி - கார்த்திக் நேத்தா


நீரின்றி அமையாது உலகு

நீரின்றி அமையாது
நிலத்தில் நிலவு
நிலத்தில் நிலா
முழுதாய்ப்பூக்க வேண்டுமெனில்
நீர் வேண்டும்
புல்லாங்குழலில் வெட்டிய
ஒன்பது கிணறுகளில்
ஒன்பதாய்ப் பூக்கிறது
ஒற்றை நிலா 
நிலா பூத்திருப்பது தெரியாமல்
கிணற்றங்கரையில் அமர்ந்து
பீடி ருசிக்கிறான்  கிணறுவெட்டி
புல்லாங்குழலைத்
திருடிச் செல்லும் சிறுவன்
வழியில் சிந்திக்கொண்டே
ஓடுகிறான்
ஒன்பது கிணற்று நீரையும்
ஒன்பது நிலவுகளையும்


கல் மூச்சு

சிட்டிகை அளவுக்
கல்லொன்றில் மேல்
ஊர்ந்து செல்கிறது
சிறிய எறும்பு
சிட்டிகை அளவினும்
சிறிய எறும்பு
கல்லைக் கடக்கையில்
கல்லின் மூச்சாக.


மாயா

பிச்சைப் பாத்திரத்தில்
விழுந்து கிடக்கிறது
பூ
அதுதான் வேண்டுமென
அடம்பிடிக்கிறாள் மாயா



குழந்தையும் மனிதனும்

நான் அழுதுக்கொண்டிருந்தேன்
அந்தக் குழந்தை பார்த்தது
அவ்வளவு துல்லியமாக
தன் அம்மாவிடம்
அழுது காட்டியது

அந்தக் குழந்தை
சிரித்துக் கொண்டிருந்தது

நான்  தற்கொலை செய்துகொள்வதற்கு
வேறென்ன பெரிய காரணம்
வேண்டும்

சும்மா இரு

அதுபற்றிக்
கவலை வேண்டாம்
அதில் உன் பங்கு
எதுவுமில்லை
கேள்
சும்மா இருந்தால்
ஞானம் தலைக்கேறும்
பிதற்றவோ பெருமை அடிக்கவோ
அருகதை இல்லை உனக்கு
நீ வாங்கவுமில்லை துவைக்கவுமில்லை
காயப் போடவுமில்லை
கொடிக்கயிற்றில் காயும் வெயிலை
எடுத்துப்போக இரவால் மட்டுமே முடியும்
சும்மா இருந்தால் ஞானமடைவதில்
உனக்கென்ன சிரமம்?


பூனை மழை

மழைக்காலம் தொடங்கிவிட்டது
நடக்கத் தொடங்கிவிட்டான்
பைத்தியக்காரன்
பூக்களை மேய்ந்துகொண்டிருந்த
வயோதிக நாய்
அவனைப் பின்தொடர்கிறது
வேடிக்கைப் பார்க்கிறது
வெள்ளைப் பூனை
சட்டச் சட சட
சட்டச்சட சட.


சுடர்


நிறைய பூச்சிகளைத் தின்றும்
பறக்கத் தெரியாத சுடர்
மனமா?

பிரம்ம மோட்சம்

தான் மூத்திரம் விடுவதை
முதல்முறையாய்ப்
பார்த்துக்கொண்டிருக்கும் குழந்தையைப்
பார்த்துக்கொண்டிருக்கும் நான்
என்னவாக உள்ளேன் அம்மா?

(தவளைக்கல் சிறுமி – கார்த்திக் நேத்தா – க்ரியா – ஜனவரி 2013 – ரூ.100)